புதுடெல்லி:
குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பணம் இல்லாமல் ஏராளமான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.
ஏடிஎம்-களில் பணம் தட்டுப்பாடு தொடர்பாக நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும் என்றும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
பணத் தட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி. கார்க் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கடந்த ஒரிரு மாதங்களாக பணத்தின் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு சராசரி தேவை ரூ.200 கோடி என்ற நிலைக்கு மாறாக, ஏப்ரல் மாதத்தில் முதல் 13 நாட்களில் மட்டும் ரூ.450 கோடி தேவைப்பட்டது.
பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சப்ளையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கூடுதலாக பணம் அச்சிடப்படும். உதாரணமாக, ரூ.500 நோட்டுக்களை தினமும் 5 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.2500 கோடிக்கு அச்சிடப்படும். 500 ரூபாய் நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை 70,000-75,000 கோடியாக இருக்கும்.
தற்போது தேவைக்கும் அதிகமாக 2.5 முதல் 3 டிரிலியன் ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தோம். கடந்த சில தினங்ளாக பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக அளவில் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.1.75 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு இருப்பு உள்ளது. எனவே, பணத்தட்டுப்பாடு என்று பீதியடைந்து பொதுமக்கள் பணத்தை பதுக்கி வைக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.