செய்திகள்

இரவு நேரத்தில் டான்ஸ் பாராக மாறிய பள்ளி - வலுக்கட்டாயமாக மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த அவலம்

உத்தரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறும் வீடியோ இணையங்களில் வெளியாகி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

லக்னோ:

உத்தரபிரேதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் குழந்தைகள் படிக்க வேண்டிய இடத்தில் மது பாட்டில்கள் கிடந்தது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட் கிழமை ரக்‌ஷாபந்தன் தினத்தை ஒட்டி ஜமால்பூர் பகுதியில் உள்ள கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அக்கிராம தலைவர் ராம்கேஷ் யாதவ் தனது நாளை கொண்டாடுவதற்காக பள்ளியின் சாவியை தலைமை ஆசிரியரிடமிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மது அருந்து கொண்டு நடனத்தை பார்ப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராகேஷ் யாதவின் உறவினர்கள் தான் பள்ளியில் விழா கொண்டாடியதாக கிராமத்தினர் கூறினர். பிறந்த நாள் கொண்டாடியது உண்மை தான், ஆனால் தான் அதில் பங்கேற்கவில்லை என்று ராம்கேஷ் யாதவ் கூறியுள்ளார்.

செவ்வாய்க் கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறையில் மது பாட்டில்கள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதனை மாணவர்கள் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர்.

இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் அசோக் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் இது போன்ற சம்பவம் நடந்தது மிகவும் மோசமான ஒன்றாகும். இதில் சம்பந்தப்பட்ட கிராம தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி திவாரி தெரிவித்தார்.