செய்திகள்

கண்டமங்கலம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு

அரசு பள்ளி ஆசிரியர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார்.

கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ள பள்ளிநெலியனூர் பகுதியை சேர்ந்தவர் ரமணி (வயது 29). இவர் ராம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இவரது மனைவி அபிமா(25). கணவன் மனைவி இருவரும் சிறுவந்தாடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் துணிகள் எடுத்துக்கொண்டு சொந்த ஊரான பள்ளி நெலியனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

கொத்தம்பாக்கம் ஏரிக்கரை அருகே அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த வாலிபர் கண்இமைக்கும் நேரத்தில் அபிமா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிசங்கிலியை பறித்து கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று ரமணி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் நகையுடன் தப்பி சென்று விட்டார். அவர் பறித்துச்சென்ற நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ரமணி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து தாலிசங்கிலியை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றார். #tamilnews

SCROLL FOR NEXT