செய்திகள்

டெல்லி செங்கோட்டையை தொடர்ந்து மேலும் சில நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு

டெல்லி செங்கோட்டையை தொடர்ந்து மேலும் சில நினைவு சின்னங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #adoptaheritagesite #MonumentunderPrivateCare

மாலை மலர்

புதுடெல்லி: 

இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களில் ஒன்றாக செங்கோட்டை உள்ளது. பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.5 கோடி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி வீதம், ரூ.25 கோடியை டால்மியா நிறுவனம் பெற்றுக்கொண்டு டெல்லி செங்கோட்டையை பராமரிக்க இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மேலும் சில நினைவு சின்னங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை இணை-மந்திரி அல்போன்ஸ் கூறியதாவது:- 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பராமரிப்பு பணிக்காக ஹூமாயூன் கல்லறை ஆகாகான் அறக்கட்டளைக்கும், தாஜ்மகாலை இந்தியன் ஓட்டல்கள் நிறுவனத்துக்கு வழங்கியதை எப்படி மறந்தார்கள்? மேலும், சில நினைவு சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நியாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சியில் ஐந்து நினைவு சின்னங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதில் சில பிரச்சனைகள் இருந்தது. அந்த திட்டம் சரியாக செயல்படும் விதத்தில் பல மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அரசால் எடுக்கப்பட்ட நிர்வாக முடிவாகும். தற்போதைய திட்டம் செயல்படுத்தப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் சில தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை உள்ளடக்கி இத்திட்டத்தை நாங்கள் விரிவுபடுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #adoptaheritagesite #MonumentunderPrivateCare #KJAlphons #tamilnews