புதுடெல்லி:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், லோகுர் ஆகிய நால்வரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும் என்று நால்வரும் கூட்டாக பேட்டியளித்தனர்.
நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட மந்திரி ரவிஷங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், நீதிபதிகள் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சக இணை மந்திரி சவுத்ரி கூறியதாவது, “ நமது நீதித்துறை உலகெங்கும் புகழ் பெற்றது, அது சுதந்திரமாக இருக்கிறது, மேலும், இந்த பிரச்சனை அதுவாகவே தீர்ந்துவிடும்” என தெரிவித்தார். இது நீதித்துறையின் உள்விவகாரம் என்று தெரிவித்த அவர், இதில் மத்திய அரசி தலையிடாது என தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதாக கூறியுள்ளார்.