தஞ்சாவூர்:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. தஞ்சையில் இன்று பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் பஸ்சை ஓட்டி செல்கிறார்கள். இதனால் ஒரு சில பஸ்கள் ஓடுகிறது.
மேலும் மாற்று டிரைவர்கள் மூலமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் ஊழியர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
தஞ்சையில் மாற்று டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்குவதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் துரை. மதிவாணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்கள் இயங்கியது. அதில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
நாகை மாவட்டத்திலும் இன்று பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் மாற்று டிரைவர்கள் மூலம் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டது.
வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.