செய்திகள்

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் இரவு குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த பஸ் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

திடீரென்று அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் டயருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அப்போது பஸ்சுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த டிரைவர்-கண்டக்டர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் பஸ்சின் டயர் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர்.

அவர்களது சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் டயர் முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த பஸ்சுக்கு மாற்று டயர் பொருத்தப்பட்டு உடனே கடலூர் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அரசு டவுன் பஸ்சுக்கு தீ வைத்த மர்ம மனிதர்கள் யார்? என்று போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews