செய்திகள்

சட்டசபையில் பலப்பரீட்சை எப்போது?: கவர்னர் இன்று முடிவு

பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை திரும்புகிறார். அப்போது சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கிறார்.

மாலை மலர்

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த குழப்பமும் நடவடிக்கைகளும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இரு அணிகளாக பிரிந்து செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக இணைந்து கட்சி பதவியையும், ஆட்சி பதவியையும் பகிர்ந்து கொண்டார்கள்.

தினகரன் மட்டும் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் கடிதம் கொடுத்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவையும், தினகரனையும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள்.

அதன் பிறகு மோதல் போக்கு அதிகரித்தது. கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு செய்தார்.

இதை ஏற்று எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். உரிய விளக்கம் அளிக்காததால் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து 18 தொகுதிகள் காலியாகி விட்டதாக அறிவிக்க கோரி இந்திய தேர்தல் கமி‌ஷனுக்கு தமிழக சட்டசபை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பி உள்ளார். இதை ஏற்று தேர்தல் கமி‌ஷன் 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட உள்ளது.

அதன் பின்னர் அந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அத்துடன் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

சபாநாயகர் நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பேசினார்.

தற்போதுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


அதன் பின்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று காலை சென்னை புறப்படும் முன் டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் மீண்டும் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசியலில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதாக தெரிய வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை திரும்புகிறார். அப்போது சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு எடுக்கிறார்.

முன்னதாக சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் கவர்னர் ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை (20-ந்தேதி) வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை தடையை நீக்கி கோர்ட்டு உத்தரவிட்டால் இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.


இதற்கிடையே இன்று சென்னை வரும் கவர்னர் வித்யாசாகர்ராவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இதே போல் எதிர்க்கட்சி தலைவர்களும் கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

இப்போதைய நிலையில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டி பலம் உள்ளதால் அவரது ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரசு கவிழும் வாய்ப்பு இல்லை.

மொத்தம் உள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் அ.தி.மு.க.வின் பலம் (சபாநாயகருடன் சேர்த்து) 135 ஆக இருந்தது. 18 பேர் நீக்கப்பட்ட பின்பு மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 215 ஆகவும் அ.தி.மு.க.வின் பலம் 117 ஆகவும் உள்ளது. இதில் மெஜாரிட்டிக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு போதும். கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஆதரிக்காவிட்டாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று விடுவார்.

சட்டசபையில் கட்சிகள் பலம் வருமாறு:-

18 பேர் நீக்கப்படும் முன்பு:-
மொத்த இடங்கள் - 234
காலி இடம் -  1
அ.தி.மு.க. (சபாநாயகர் உள்பட) - 135
தி.மு.க. -89
காங்கிரஸ்- 8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -1