சிம்லா:
சமீபத்தில் நடந்த குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. இதில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 68. இதில் 44 இடங்களில் பாரதிய ஜனதாவும், 21 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்று இருந்தன.
பாரதிய ஜனதா கட்சி முன்கூட்டியே முதல்-மந்திரி வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்தித்தது. மாநிலத்தில் ஏற்கனவே 3 முறை முதல்-மந்திரியாக இருந்த பிரேம்குமார் துமால் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால், எம்.எல்.ஏ. தேர்தலில் அவர் யாரும் எதிர்பார்க்காத அளவில் தோல்வி அடைந்தார். எனவே, தோல்வி அடைந்த அவரை முதல்- மந்திரியாக தேர்வு செய்ய பாரதிய ஜனதா மேலிடம் முன்வரவில்லை. புதிய முதல்-மந்திரியாக வேறு நபரை தேர்வு செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதற்காக மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.
தேர்தலில் தோல்வியுற்றாலும் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட பிரோம்குமார் துமால் விரும்பினார். அவரது ஆதரவாளர்களான பல எம்.எல்.ஏ.க்களும் பிரேம்குமார் துமாலை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். ஆனால், கட்சி மேலிடம் அதற்கு ஒத்து கொள்ளவில்லை.
முதல்-மந்திரி போட்டியில் இருந்து விலகி கொள்ளும்படி துமாலிடம் கட்சி மேலிடம் வற்புறுத்தியது. இதற்கு பதிலாக துமாலுக்கு கவர்னர் பதவி தருவதாக கூறினார்கள்.
துமாலின் மகன் அனுராக் தாகூர் எம்.பி.யாக இருக்கிறார். துமால் கவர்னர் பதவியை விரும்பவில்லை என்றால் அவருடைய மகனுக்கு மத்திய மந்திரி பதவி தருவதாகவும் உறுதி கூறினார்கள்.
இதையடுத்து துமால் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டார். அதைத்தொடர்ந்து மற்ற நபர்களில் ஒருவரை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பதவிக்கு மத்திய மந்திரி ஜே.பி. நட்டா, முன்னாள் மாநில மந்திரி ஜெயராம் தாகூர் ஆகியோர் போட்டியில் இறங்கினார்கள். இறுதியாக ஜெயராம் தாகூர் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே பிரேம் குமார் துமால் கூறும் போது, நான் எந்த கோரிக்கையையும் கட்சியிடம் வைக்கவில்லை. கட்சியிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அது சம்பந்தமாக நான் கேள்வி எழுப்ப மாட்டேன். கட்சி என்ன சொல்கிறதோ அதை நான் செய்வேன் என்று கூறியுள்ளார்.