செய்திகள்

புதுவை விமான நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ சேவை: கவர்னர் கிரண்பேடி தகவல்

விமான பயணிகளின் வசதிக்காக புதுவை விமான நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்படும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் வார இறுதி நாட்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

சமீபகாலமாக தூய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் கவர்னர் மாளிகையில் இருந்து மாணவர்களுடன் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துகிறார்.

இதேபோல சனிக்கிழமையான இன்று கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் கிரண் பேடி ஆய்வு செய்ய சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அவரோடு மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர். புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு கவர்னர் கிரண்பேடி சென்று அங்கு ஆய்வு செய்தார்.

இந்த விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்டு 16-ந்தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதனால் விமான நிலையத்தில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை கவர்னர் ஆய்வு செய்தார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் கவர்னரிடம் அதற்கான விளக்கத்தை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

விமான பயணிகளின் வசதிக்காக புதுவை விமான நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்படும்.

புதுவையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 95 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன்.

இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க மருத்துவ இடங்கள் அனைத்தும் நீட்தேர்வின் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும்.

வரும் மாதங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிகள் வழங்கப்படும். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாது. இதனால் அரசுக்கு செலவினம் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT