சென்னை:
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
இந்த பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணைவேந்தர் பதவி இடங்கள் காலியாக உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பல்வேறு துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதனும், உயர் கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவாலும் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். 20 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவி இடங்கள் காலியாக உள்ளதால் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவது தாமதம் ஆகி வருகிறது.
இதுநாள் வரை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது பற்றி கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டது. விரைவில் துணைவேந்தர்களை தேர்வு செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. எனவே தற்போது புகாருக்கு இடம் அளிக்காத வகையில் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று கவர்னர் ஆலோசனை கூறி உள்ளார்.
எனவே காலியாக உள்ள 4 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குழுவை உடனடியாக நியமித்து துணைவேந்தர் பதவி இடங்களை நிரப்ப அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.