கோவை:
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் 6-ந்தேதி பொறுப்பேற்றார்.
ஒரு மாதமாக அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வந்தார். தமிழகத்தின் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை கற்று வருகிறார்.
இந்த நிலையில் கவர்னராக பதவி ஏற்று 39 நாட் களே ஆகியுள்ள நிலையில் நேற்று திடீரென கோவையில் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கவர்னர்களாக இருந்தவர்கள் தங்கள் பார்வைக்கு வரும் கோப்புகளில் கையெழுத்திட்டு அனுமதி வழங்குவார்கள். அந்த பணியோடு தங்களது அதிகார வரம்பை நிறுத்தி கொள்வார்கள்.
எப்போதாவது சில சமயம், சில முக்கிய கோப்புகளில் உள்ள விஷயங்கள் குறித்து கவர்னர்கள் கேள்வி கேட்பதுண்டு. அதற்கு உரிய பதில் அளிக்கப்பட்டதும், மேற்கொண்டு அரசாங்க விஷயங்களில் தலையிட மாட்டார்கள். ஆனால் இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறாக கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பது பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட் டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்ற கவர்னர் பன்வாரிலால் மதியம் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். பிறகு அவர் கோவை மாவட்ட கலெக்டர் அரிஹரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் உள்பட அதிகாரிகளை அழைத்து திடீரென ஆலோசனை நடத்தினார்.
சுமார் 3 மணி நேரம் நடந்த அந்த ஆலோசனையின்போது கவர்னர் பன்வாரிலால் நிறைய கேள்விகள் கேட்டார். அதோடு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்ததாக கூறப்படுகிறது. கவர்னரின் இந்த நடவடிக்கை அரசியலில் கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தனது ஆலோசனை கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதை கவர்னர் பன்வாரிலால் நேற்றே அறிந்தார். ஆனால் அது பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக அவர் தனது அதிரடியை மீண்டும் நிகழ்த்தினார்.
இன்று காலை 7 மணிக்கு காந்திபுரம் பஸ் நிலையம் சென்றார். அங்கு மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட நவீன கழிப்பிடத்தை பார்வையிட்டார்.
அதன் பின்னர் பஸ் நிலையம் உள்ளே சென்று தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அப்போது கையுறை அணிந்து துடைப்பத்துடன் பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை அள்ளி தொட்டியில் போட்டார்.
கவர்னருடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், துணை கமிஷனர் காந்திமதி, அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களும் கையுறை அணிந்து குப்பைகளை அகற்றினார்கள்.
பின்னர் கவர்னர் பன்வாரிலால் பஸ் நிலையத்தில் மின்னணு முறையில் அமைக்கப்பட்ட நவீன கழிப்பிடத்தை பார்வையிட்டார். மாநகராட்சி சார்பில் இந்த கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி ராம் லட்சுமணன் நகரில் உள்ள சன்னிசைடு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். இந்த குடியிருப்பில் வசித்து வருபவர்கள் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சியிடம் வழங்குகிறார்கள். இந்த பணிகள் எப்படி நடக்கிறது? என்பது குறித்து பார்வையிட்டார்.
பின்னர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டார். பின்னர் திருப்பூர் புறப்பட்டு சென்றார். பெருமாநல்லூரில் விவசாயிகள் அமைப்பு சார்பில் நடைபெறும் மரம் நடும் விழாவில் பங்கேற்கிறார்.
கோவை, திருப்பூரில் கவர்னர் பன்வாரிலால் மேற்கொண்ட நடவடிக்கைகள், புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி அடிக்கடி அதிரடியாக செய்யும் நடவடிக்கைகள் பாணியில் இருந்தது. இதனால் கிரண்பேடி மீது அடிக்கடி விமர்சனங்கள் எழுந்தபடி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க., கவர்னர் கிரண்பேடி மூலம் ஆட்சி அதிகாரங்களில் குறுக்கீடு செய்வதாகவும் தேவை இல்லாமல் தலையிடுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
தற்போது அதே பாணியில் தமிழக கவர்னர் பன்வாரிலாலும் ஆலோசனை நடத்தி இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்போவதாக கவர்னர் பன்வாரிலால் அறிவித்துள்ளார்.
அப்படி அவர் மாவட்டம் வாரியாக ஆலோசனை நடத்தினால் அரசியல் ரீதியாக சர்ச்சைகள் உருவாகும் என்று தெரிகிறது. இதனால் ஆளும் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து கட்சித் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கவர்னர் பன்வாரிலாலின் ஆலோசனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களிடையே உரசலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.