தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சை கிளம்பியது. அமைச்சர்கள் போல அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநில அதிகாரத்தில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தனர்.
ஆனாலும் கவர்னர் அதனை கண்டு கொள்ளவில்லை. எதிர்கட்சிகளின் கருப்புகொடி போராட்டத்தையும் மீறி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு அழைப்பு விடுத்தார். அதன்படி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கால்நடை, மீன்வளம், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன், திருவள்ளூவர், நெல்லை, சேலம், கோவை வேளாண்மை உள்ளிட்ட 17 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதிய உணவுக்கு பிறகு மாலை வரை நடந்தது. கூட்டத்தில் ஒவ்வொரு துணைவேந்தர்களிடையே பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து முதலில் கேட்டறிந்தார்.
பின்னர் பல்கலைக்கழகங்கள் மீது பெறப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்தார். பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் போன்றவற்றில் எழுந்துள்ள முறைகேடு பற்றி அனைத்து துணைவேந்தர்களிடமும் கேட்டறிந்தார். புகாருக்கு இடம் அளிக்காமல் அனைவரும் பணியாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்கள் மீது புகார் வரக்கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும் துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார், அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகம், உடற்கல்வியியல் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. #TNGovernor #BanwarilalPurohit #Chennai #tamilnews