லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் சென்காரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உன்னாவ் சம்பவத்தில் தொடர்புடைய எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்காருக்கு அளிக்கப்பட்டிருந்த ஒய் பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், உன்னாவ் சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிறையில் இருந்து வருகிறார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். #Unnao #Kuldeepsinghsengar