செய்திகள்

நிதி பற்றாக்குறையால் அரசு தவிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ரூ.7 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையால் தவிக்கும் உங்கள் அரசை முதலில் நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கோலப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கிண்டியில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, “மேடையில் இருந்து நான் கீழே இறங்குவதற்கு முன்பு ஒரு முடிவெடுத்து விட்டு இறங்க வேண்டும்” என்று கூறினார்.

நான் இந்த மேடையில் ஏறும்போதே ஒரு முடிவெடுத்து விட்டுத்தான் ஏறி இருக்கிறேன்.

மா.சுப்பிரமணியன் பேசும்போது தலைவர் கலைஞரை என் தந்தை முதன் முதலில் சிறைச்சாலையில் தான் சந்தித்தார் என்றார். நானும் என் தந்தையை சிறைச்சாலையில் தான் சந்தித்தேன் என்றும் கூறினார்.

தலைவர் கலைஞரையும் நான் பிறந்தவுடன் முதன் முதலில் சிறைச்சாலையில்தான் சந்தித்தேன்.

நான் இங்கு நடிகராக வரவில்லை. பெருமையோடு சொல்ல வேண்டுமானால் தலைவர் கலைஞரின் பேரனாக வந்திருக்கிறேன். தளபதியின் மகனாக வந்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு தொண்டனாக சந்திக்க வந்திருக்கிறேன்.

பத்திரிகை நிருபர்கள் என்னிடம் கேள்வி கேட்கும் போது நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்களா? எப்போது வருவீர்கள் என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு பதில் கூறும்போது, “நான் அரசியலில்தான் இருந்தேன். நான் பிறந்ததில் இருந்து தி.மு.க.தான். என் உடலில் ஓடுவது தி.மு.க. ரத்தம். சுயமரியாதை ரத்தம் என்று சொன்னேன்.

அடுத்த கேள்வியாக நீங்கள் அடுத்த தேர்தலில் நிற்க போகிறீர்களா? ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க போகிறீர்களா? என்று கேட்டனர்.

நான் தயவு செய்து உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அரசியல் பயணம் தேர்தலை நோக்கி மட்டுமல்ல. தி.மு.க. தொண்டர்களுடன் ஒன்றாக தொடர்ந்து பயணிப்பேன்.

உதயநிதி அரசியலுக்கு வந்து விட்டாரே என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு அண்ணன் ஜெயக்குமார் நாங்கள் எத்தனையோ நிதியை பார்த்து விட்டோம். இந்த நிதி பெரிய விஷயமா? என்று கூறி இருக்கிறார்.

அவருக்கு நான் கூறிக் கொள்வது அண்ணே, 7 லட்சம் கோடி ரூபாய் உங்க அரசு நிதி பற்றாக்குறையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

முதலில் நீங்க அந்த நிதியை கவனியுங்கள். இந்த நிதி இங்குதான் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். பேசிக் கொள்ளலாம்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

மா.சுப்பிரமணியன் பேசுகையில் கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் கருவிலேயே அரசியலுக்கு வந்தவர். இவருக்கு பின்னால் எல்லாமே அரசியல்தான். தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலினுக்காக குழந்தையாக இருக்கும் போதே உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டவர்.

மற்றவர்கள் ஓய்வு பெறும்போது அரசியலுக்கு வருகிறார்கள். இவர் கருவிலேயே வந்தவர். அரசியல் எதிரிகளை வீழ்த்திட இவருக்கு வீரவாள் பரிசாக அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், பாலவாக்கம் சோமு, இப்ராகீம், வாசுகி பாண்டியன், குணசேகரன், மகேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், பெருங்குடி ரவி, குணா சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கோல்டு யுகாஷ், ஆனந்த், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.  #tamilnews