வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கீழ்கூத்தப் பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. மொத்தம் 94 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 1980-ம் ஆண்டு இந்த பள்ளி கட்டப்பட்டது. 3 கட்டிடங்களில் உள்ள வகுப்பறையில் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவி உள்பட 4 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த பள்ளியின் மேற்கூரை அனைத்து சேத மடைந்து இருந்தது. அதை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.
இன்றுகாலை வழக்கம் போல் 9 மணி அளவில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். சில மாணவ-மாணவிகள் அங்குள்ள வரண்டாவில் புத்தகை பைகளை வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பள்ளி வரண்டாவின் மேற் கூரை இடிந்து விழுந்தது.
இதில் மாணவர்கள் மனேஜ்குமார், சஞ்சய், அரிஹரன், தயானந்து, மாணவிகள் பவித்ரா, அணு, அபர்ணா உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் கீழ்கூத்தப் பாக்கம் கிராமம் முழுவதும் காட்டுதீ போல பரவியது. உடனே மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்தனர். அங்கு மாணவ- மாணவிகள் கை, கால்களில் காயம் அடைந்து அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களை வெளியே அழைத்து வந்தனர்.
காயம் அடைந்த மாணவ- மாணவிகள் 10 பேரையும் தைலாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு பூட்டுபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்தார். போராட்டம் நடத்திய பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் அதிகாரியிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை முற்றுகையிட்டனர்.
எங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பலமுறை கட்டிடத்தை சீரமைக்க கோரி கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பள்ளிக்கூடத்துக்கு இனி மேல் குழந்தைகளை அனுப்பமாட்டோம். வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற வேண்டும் என்று கூறினர்.
உடனே அவர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்காமல் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
பள்ளியின் மேற்கூரை இடிந்துவிழுந்து மாணவ- மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.