செய்திகள்

தேனி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

மாலை மலர்

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வந்து இருந்தனர். அவர்களில் சிலர் தங்கள் கையில் தங்கள் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி, தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து இருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 3 மனுக்கள் கொடுக்கப்பட்டன. மாவட்ட செயலாளர் நாகரத்தினம் கொடுத்த மனுவில், ‘தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிப்பிடம் சரியாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. மருத்துவமனை வளாகம் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. தனியார் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. துப்புரவு பணியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற சுமார் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

அசுத்தமான குடிநீர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அக்பர்பாட்ஷா அளித்த மனுவில், ‘தேவதானப்பட்டி பேரூராட்சி, 6 முதல் 9–வது வார்டுகள் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் சாக்கடை கலந்து அசுத்தமாக இருக்கிறது. குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

அக்கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளர் ஜாபர்சேட் அளித்த மனுவில், ‘பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் சாக்கடை, மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். திருட்டை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள்

அதேபோல், திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த ஒரு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ஒரு சிறுமி, 2 சிறுவர்களை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த மச்சக்காளை என்பவரின் குழந்தைகளான ரஞ்சித்குமார் (வயது 14), ராஜேஷ் (12), முத்துலட்சுமி (8) ஆகியோர் தற்போது ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

மச்சக்காளையின் மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். மச்சக்காளையும் இறந்து விட்டார். இந்த சிறுவர்கள், சிறுமி அவருடைய பாட்டி கருப்பாயி பராமரிப்பில் இருந்தனர். அவராலும் பராமரிக்க முடியாததால் இந்த குழந்தைகளை மீட்டு எங்கள் காப்பகத்தில் அனுமதிக்கவும், குழந்தைகளுக்கு தேவையான படிப்பு தொடர்ந்து கிடைத்த வழி செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறி இருந்தனர்.