செய்திகள்

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் மரணம்: உறவினர்கள் மறியல்

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சையளிக்கப்படாததால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், எசனை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அலமேலு (வயது 30). நிறைமாத கர்ப்பிணியான இருந்ததால், கடந்த 30-ந்தேதி சொந்த ஊர் வந்தார். நேற்று (2-ந்தேதி) காலை வீட்டுப்படியிலிருந்து அலமேலு தவறி விழுந்ததால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அலமேலுவை பரிசோதித்த போது, அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. ஆனால், மருத்துவர்கள் உயிரிழந்த குழந்தையை உடனடியாக எடுக்காமல் காலம் தாழ்த்தி இரவு தான் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். இதனால் அலமேலு உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

தொடர் சிகிச்சை பெற்று வந்த அலமேலு நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தாயும், சேயும் உயிரிழந்து விட்டதாகவும், முறையான சிகிச்சையளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அரசு மருத்துவமனை எதிரில் பெரம்பலூர் துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த, கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.