புதுடெல்லி:
நீடித்த பொருளாதார மந்தநிலை, மோசடியான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வராக்கடன் தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளது. எனவே வங்கிகள் தங்கள் இருப்புச்சீட்டை (பேலன்ஸ் ஷீட்) சீர்படுத்தவும், வரித்திறனை எட்டவும் சீரான இடைவெளியில் வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.
அந்தவகையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரையிலான சுமார் 3½ ஆண்டுகளில் ரூ.2,41,911 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி இணை மந்திரி சிவ்பிரதாப் சுக்லா நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்து உள்ளார்.
சர்பாசி சட்டம் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாய விதிகளின்படி, இந்த கடன்களை திருப்பிச்செலுத்தும் பொறுப்பு தொடர்ந்து அந்தந்த கடன்தாரர்களையே சாரும் என்று கூறிய சுக்லா, எனவே கடன்தள்ளுபடி நடவடிக்கையால் அவர்களுக்கு எவ்வித பலனும் இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் ரிசர்வ் வங்கி விதிகளின்படி இந்த கடன்களை வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டோரின் பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். யாரை பாதுகாக்க இந்த நடவடிக்கை? என கேள்வி எழுப்பியுள்ள அவர், தற்கொலைக்கு தள்ளப்படும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை கூட செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்த கடன் தள்ளுபடி விவகாரம் ஒரு மிகப்பெரிய ஊழல் எனவும் அவர் வர்ணித்துள்ளார்.