சென்னை:
ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று (7-ந் தேதி) முதல் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இறுதியாக ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்று செயல்படுத்த அக்டோபர் 15-ந் தேதி வரை காலம் அவகாசம் தர வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது.
இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் முரண்பட்ட கருத்துக்கள் நிலவியது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று கொள்வதாக ஒரு சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 2 ஆக உடைந்தது.
அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.
இது பற்றி போராட்டத்தில் பங்கேற்காத ஜாக்டோ-ஜியோவின் மற்றொரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கணேசன் கூறியதாவது:-
முதல்-அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது கோரிக்கைகளை நிறைவேற்ற அக்டோபர் 15-ந் தேதி வரை அவகாசம் கேட்டார்கள். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். ஊதியக் குழு பரிந்துரையை 30.9.17 அன்று அறிக்கையாக பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் தாமதம் ஏற்பட்டால் 1.10.17 முதல் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக கூறி இருக்கிறார்கள்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களை காலமுறை ஊதியமாக மாற்ற பரிசீலனை செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
புதிய பென்சன் திட்டம் ரத்து செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை 30.11.17ல் பெறப்பட்ட பிறகு தான் அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்து முடிவு சொல்வதாக முதல்வர் கூறியுள்ளார். அதில் சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றால் போராட்டத்தை கொண்டு செல்லலாம்.
இந்த மறியல் போரட்டத்தில் தமிழ்நாடு தலைமை செயலகம் சங்கம், அரசு பணியாளர் சங்கம், ஊதிய ஓட்டுனர் சங்கம், காவல்துறை அமைச்சக பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தேர்வாணையம் சங்கம், நீதித்துறை உள்ளிட்ட 60 சங்கங்கள் பங்கேற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து என்.ஜி.ஓ. சங்க மாநில தலைவர் இரா. சண்முகராஜன் கூறியதாவது:-
ஜாக்டோ-ஜியோ கூட் டமைப்பு 2 ஆக உடையும் என்று ஏற்கனவே எதிர் பார்த்ததுதான். ஜாக்டோ- ஜியோவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆசிரியர் சங்கம் தலைமை செயலக சங்க உறுப்பினர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு முதல்-அமைச்சர் உத்தரவாதத்தின் அடிப்படையில் அக்டோபர் 15-ந்தேதி வரை போராட் டத்தை ஒத்திவைப்பது சிறந்த முடிவு.
ஆனால் போராட்டம் என்ற பெயரில் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டமைப்பில் செயல்படும் அரசு ஊழியர் சங்கம் சார்ந்த அமைப்புகள் போராட்டத்தை தொடர்வது என்பது வாடிக்கையாக உள்ளது.
இதன் மூலம் அரசு அலுவலர்கள், ஊதியம் பிடித்தல் போன்ற சிரமம் ஏற்படுமே தவிர தீர்வு ஏற்பட போவதில்லை. போராட்டம் வெற்றி அடைய போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.