புதுக்கோட்டை:
தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு இன்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் முருகவேல் ஓட்டினார். கண்டக்டராக முனியாண்டி பணியில் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் பயணித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சு வாடி புதிய அரசு மருத்துவ கல்லூரி அருகே செல்லும் போது திடீரென பஸ்சின் என்ஜினில் இருந்து கரும் புகை வெளியேறியது.
பின்னர் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. உடனே டிரைவர் சாலையோரமாக பஸ்சை நிறுத்தினார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்ததோடு, அலறியடித்து கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினர். பயணிகள் அனைவரும் இறங்கியதும் பஸ் மளமளவென தீப்பிடித்தது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புகூடாக மாறியது. பின்னர் லேசாக எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
பஸ்சில் தீப்பிடித்தது எப்படி? என்று தெரியவில்லை. கடுமையான வெயில் காரணமாக என்ஜின் சூடாகி தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.