செய்திகள்

சிவகங்கை- விருதுநகர்- ராமநாதபுரத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்

சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3-வது நாளாக அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். #Transportstrike #Busstrike #MTCstrike

மாலை மலர்

விருதுநகர்:

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு எச்சரித்தும் பஸ் போக்குவரத்து ஊழியர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 40 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் தனியார் பஸ்கள், மினிபஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் கணிசமாக இயக்கப்பட்டதால் பொது மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை போன்ற வெளி மாவட்டங்களுக்கு குறைந்த அளவு பஸ்கள் சென்று வந்தன. வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

சில இடங்களில் தனியார், மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பணிமனைகளில் இருந்து 315 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.

அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இன்று மாவட்டத்தில் கணிசமாக பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பஸ் நிலையத்தில் இருந்து தனியார், மினி பஸ்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்றன.

காரைக்குடியில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வழக்கமாக தினமும் 426 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் நேற்று சொற்ப எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்கள், மாணவ, மாணவிகள், வெளியூர் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தனியார் வாகனங்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.

3 மாவட்டங்களில் நகரின் புறநகர் பகுதி, கிராமங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் நீண்ட தூரம் நடந்தும், மோட்டார் சைக்கிளில் பயணித்தும் பஸ் ஏறி சென்றனர். குறிப்பாக வியாபாரிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் தவித்தனர்.

விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அண்ணா தொழிற்சங்க பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஒட்டுநர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.