செய்திகள்

அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி: டிரைவர் கைது

சென்னையில் அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவத்தில் பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று காலை ஜாபர்கான்பேட்டை 100 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சின்ன சேலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக முத்துசாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் முத்துசாமியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனரான விழுப்புரத்தை சேர்ந்த ராமலிங்கம் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.