விபத்து 
செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்- ஆசிரியர் பலி

திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆசிரியர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையை சேர்ந்தவர் செந்தில்குமார்(32). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மஞ்சுளா(31). இவர் ஊத்துக்குளி மொரட்டுப் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று கோவை செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் செந்தில்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு ரெயில் நிலையம் நோக்கி வந்தார்.

ஊத்துக்குளி ரோடு எஸ்.ஆர்.சி. மில் பாலம் அருகே வந்தபோது திருப்பூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று செந்தில் குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான சேலத்தை சேர்ந்த வேல்முருகன்(41) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.