செய்திகள்

கோராக்பூர் துயரம்: குழந்தைகளை சொந்த செலவில் காப்பாற்றிய மருத்துவர் பணி நீக்கம் - நீதியை கருசிதைத்த உ.பி. அரசு

கோராக்பூர் மருத்துவமனை துயர சம்பவத்தில், ஏராளமான குழந்தைகளை சொந்த செலவில் காப்பாற்றிய மருத்துவரை பணி நீக்கம் செய்து உ.பி. அரசு நீதியை கருசிதைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாலை மலர்

லக்னோ:

கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் சுமார் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திக் கொண்டது. இந்த விபரீதம் காரணமாக 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உத்தரபிரதேச அரசு, மருத்துவமனை முதல்வர் மிஸ்ராவை சஸ்பெண்ட் செய்தது. அதேபோல், கோரக்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவரான கபீல் கான் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்ததற்கான காரணத்தை அரசு தரப்பில் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், மருத்துவர் கபீல் கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்‌கி ஏராளமான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்ற மருத்துவராக அவர் இருந்து வந்துள்ளார். 

குழந்தைகள் மூச்சு விட முடியாமல் தன் கண் முன்னே இறந்ததை கண்டு மருத்துவர் கான் கண்ணீர் சிந்தியதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். தனது நண்பரின் நர்சிங் ஹோமில் இருந்து 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கி வந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.

ஏராளமான குழந்தைகளை சொந்த செலவில் காப்பாற்றிய மருத்துவரை பணி நீக்கம் செய்து உ.பி. அரசு நீதியை கருசிதைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கபீல் கானை பெற்றோர்கள் பாராட்டி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை பதவியில் இருந்து நீக்கி பூபேந்தர் சர்மாவை அவரது இடத்தில் நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.