செய்திகள்

இந்திய சினிமாவின் ஜாம்பவான் சாந்தாராம் பிறந்தநாளை டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்

இந்திய சினிமாவின் ஜாம்பவான் என போற்றப்படும் சாந்தாராம் பிறந்தநாளை தேடுபொறி ஜாம்பவனான கூகுள் இன்று டூடுல் போட்டு கொண்டாடியது.

மாலை மலர்

மும்பை:

மவுன மொழியில் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மராத்தி மொழி திரைப்பட இயக்குனராக திரையுலகத்துக்குள் தடம்பதித்த சாந்தாராம் ராஜாராம் வன்குட்ரே கடந்த 1927-ம் ஆண்டு முதன்முதலாக நேதாஜி பல்கர் என்ற படத்தின் மூலம் புகழ் ஏணியின் உச்சிக்கு சென்றார்.

அதன் பின்னர் ஏராளமான இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் வந்த இவர் பிரபாத் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும், மும்பையில் ராஜ்கமல் ஸ்டுடியோவையும் தொடங்கினார்.

பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற சாந்தாராமின் படைப்புகள் சர்வதேச திரைப்பட விழாக்களை அலங்கரித்துள்ளன.

இவரது இயக்கத்தில் வெளியான ‘தோ ஹாங்கேன் பாரா ஹாத்’ என்ற படம் இந்தியில் சிறந்த திரைப்படத்துக்கான ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் சிறந்த படத்துக்கான ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தையும் பெற்றது. பின்னர் எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பல்லாண்டு வாழ்க’ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நடிகர் சார்லி சாப்லின் இவரது படத்தை பாராட்டும் அளவுக்கு மிகவும் பிரபலம் அடைந்திருந்த சாந்தாராம் 1986-ம் ஆண்டு இந்திய திரைத்துறைக்கான மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றார். உடல்நலக் குறைவால்  30-10-1990 அன்று காலமானார்.

18-11-1901 அன்று பிறந்த சாந்தாராமின் 116-வது பிறந்தநாளை தேடுபொறி ஜாம்பவனான கூகுள் இன்று டூடுல் போட்டு கொண்டாடி வருகிறது.