கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
கோமதியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பல சோதனைகளை கடந்து ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கிறது.
பின்னர் அவரிடம் நிருபர்கள், தடகள போட்டியில் பங்கேற்றபோது, கிழிந்த ஷூ அணிந்து பங்கேற்றது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் வைரலாக பரவி வரும் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன். அந்த ஷூ எனக்கு அதிர்ஷ்டமான ஷூ. அதனால் நான் அதனை விரும்பி அணிந்திருந்தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான், வேறொன்றுமில்லை. சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்கள்’’ என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த இலக்கு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதே ஆகும். என்னை இதற்கு முன்பு பலருக்கு தெரியாது. அதனால், யாரும் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை. தற்போது என்னை எல்லோருக்கும் தெரிகிறது. அதனால் நிறைய பேர் ஸ்பான்சர் செய்ய முன்வருகிறார்கள். அரசும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் எனக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளது என்றார். #AsianAthleticChampionship #Gomati