சதீஷ் கெளதம் 
செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடிய பெண்ணை பாகிஸ்தானுக்கு போகச்சொன்ன பாஜக எம்.பி.

முன்னணி உருது கவிஞர் முனவர் ராணாவின் மகளும் சமூக ஆர்வலருமான சுமையா ராணாவை பாகிஸ்தானுக்கு செல்லும்படி அலிகார் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

அலிகார்:

குடியுரிமை திருத்த சட்டத்தைப்பற்றியும் அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், பேரணிகள் பற்றி அனைவரும் அறிந்ததே. பல்வேறு இடங்களில் போராட்டக்களத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த சட்டத்தைப்பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்து வருகின்ற நிலையிலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. 

உத்தர பிரதேசத்தின் ரேபரேலியைச் சேர்ந்தவர் முனவர் ராணா. பிரபல உருது கவிஞரான இவர் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். இவரது மகள் சுமையா ராணா ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.

கடந்த சனிக்கிழமை உத்தரபிரதேசத்தின் அலிகார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிரான போராட்டத்தில் சுமையா பங்குபெற்றார். கூட்டத்தில் உரையாற்றிய சுமையா, ‘திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்க உத்தரபிரதேச காவல்துறையினர் மிரட்டல் நடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு ‘மூச்சுத் திணறல்’ போன்றது’ என குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், தற்போதைய இந்தியாவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சுமையா ராணா பாகிஸ்தான் செல்ல வேண்டும் என அலிகார் தொகுதி பாஜக எம்.பி சதீஷ் கெளதம் தெரிவித்துள்ளார்.

‘இன்றைய இந்தியாவில் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக சுமையா ராணா உணர்ந்தால் அவர் பாகிஸ்தான் செல்ல வேண்டும். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இன்னும் 150-ஒற்றைப்படை மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், மீதமுள்ளவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருமே இப்போது காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் அடுத்த கல்வியாண்டிலிருந்து வளாகத்தில் இருக்க மாட்டார்கள்’ என சதீஷ் கெளதம் கூறினார்.