செய்திகள்

கட்சி பணிகளை மீண்டும் தொடர்வேன்: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டிடிவி தினகரன் பேட்டி

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டிடிவி.தினகரன் சென்னை சென்று மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

மாலை மலர்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. கட்சி 2 ஆக பிளவு பட்டது.

கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து 38 நாட்கள் சிறையில் இருந்த டி.டி.வி.தினகரன் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவரை ஜெயில் வாசலில் அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வரவேற்றனர்.

நேற்று இரவே அவர் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் ஆதரவாளர்கள் சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்க விரும்பியதால் அவர் சென்னை திரும்புவது ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் டி.டி.வி.தினகரன் இரவு டெல்லியில் தங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் அவரது ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் சென்னை புறப்பட்டார்கள்.

சென்னை புறப்படும் முன் டெல்லி விமான நிலையத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்களா?

பதில்:- சென்னை சென்று மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடுவேன்.


கே:- உங்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக அமைச்சர்கள் அறிவித்தார்களே?

ப:- என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு (சசிகலா) மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்ற யாருக்கும் என்னை நீக்கும் அதிகாரம் இல்லை.

கே:- நீங்கள் சிறையில் இருந்தபோது அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு பணிந்து செயல்பட்டது, மத்திய அரசின் பல அறிவிப்புகள் வெளியானது, இது பற்றி யாரும் கருத்து கூறவில்லையே?

ப:- மத்திய அரசுக்கு பணிந்து யாரும் செயல்படவில்லை. நட்புடன் இருக்கிறோம். 40 நாட்கள் சிறையில் இருந்தபோது என்ன நடந்தது என்பது தெரியாது. என்னென்ன வெளியானது என்பதை நான் பார்க்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சி பணியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் நிபந்தனை விதித்தனர்.

இதனால் டி.டி.வி. தினகரனை கட்சிப் பணியில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர். டி.டி.வி. தினகரனும் ஏற்கனவே நான் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் தலைமை கழகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஆதரவாளர்களை மட்டும் சந்தித்து வந்தார்.

தற்போது 40 நாட்களுக்கு பின்பு சென்னை வந்து மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்து இருப்பது அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினகரனின் மறு வருகை அ.தி.மு.க. இரு அணி தலைவர்களிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா முதல்-அமைச்சர் ஆகும் திட்டத்தை எதிர்த்ததால் ஓ.பி.எஸ்.சும், அவரது ஆதரவாளர்களும் தனி அணியாக பிரிய நேரிட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து முதல்-அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி முதலில் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார். அ.தி.மு.க இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் நடந்தபோது அவரது நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.

இணைப்பு முயற்சி தோல்விக்கு பின் அ.தி.மு.க. ஆட்சியும் கட்சியும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

அதை உறுதிபடுத்துவது போல எடப்பாடி பழனி சாமியின் செயல்பாடுகளும் அவரது அமைச்சரவை செயல்பாடுகளும் அமைந்தன. மத்திய அரசுடன் நட்பாக மாறியதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுவது உறுதியானது.