கும்பகோணம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அ.தி.மு.க கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய-மாநில மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். ஆனால் தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் தவறான பொய் பிரச்சாரங்கள் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால் தான் கடந்த 3ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என அ.தி.மு.க. அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஓரிரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்த இந்த கூட்டணி வெற்றிக்காக பாடுபடும்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதால் பெற்றோர்கள் ,மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க நேரிட்டது
இதை கல்வித்துறை 100 சதவீதம் ஊழல் இல்லாமல் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு சீன அதிபரும் இந்திய பிரதமர் வருகைதான் என்பது தவறு. அதை அ.தி.மு.க.வும் சொல்லவில்லை. த.மா.கா.வும் சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து. உலக நாடுகள் மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
த.மா.கா. சார்பில் வருகிற நவம்பர் மாதம் சென்னையிலும், திருச்சியிலும் உள்ளாட்சித் தேர்தல் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும்.
இன்சூரன்ஸ் துறையில் ஜி.எஸ்.டி. விதிப்பை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் பா.ஜனதாவுடன் இணைய போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே.
இவ்வாறு அவர் கூறினார்.