செய்திகள்

ஏழைகள் நலன் கருதி தூர்தர்‌ஷன் குறைந்த சக்தி ஒளிபரப்பை தொடர வேண்டும்: ஜி.கே.வாசன்

ஏழைகள் நலன் கருதி தூர்தர்‌ஷன் குறைந்த சக்தி ஒளிபரப்பை தொடர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம்முடைய நாட்டில் 1987 -1988-ம் வருட காலத்தில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் ஆன்டெனா மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொது மக்கள் குறிப்பாக சாமானிய மக்கள் பார்த்து பயன் அடைந்தனர்.

அதிக கட்டணம் செலுத்தாமல் அரசின் தூர்தர்‌ஷன் சேவையை சாமானிய மக்கள் ஆன்டெனா மூலம் பெற்று வருகின்ற சூழலில் கடந்த 12.01.2018 அன்று தூர்தர்‌ஷன் மூலம் நாடு முழுவதற்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 272 குறைந்த சக்தி மற்றும் மிகக் குறைந்த சக்தி ஒளிபரப்பிகளின் சேவைகளை முழுமையாக நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.

எனவே நம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் புதிய டிஜிட்டல் ஒளிபரப்புகளை பயன்படுத்தும் காலம் வரும் வரையில் குறைந்த சக்தி ஒளி பரப்புகளின் சேவையை தூர்தர்‌ஷன் தொடர மத்திய அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் குறைந்த சக்தி ஒளிபரப்பிகள் மூலம் தூர்தர்‌ஷன் சேவையைப் பெறும் லட்சக்கணக்கான பொது மக்கள் அரசு தொலைக்காட்சியைப் பார்த்து பயன்பெற ஏதுவாக இருப்பதோடு அதிக கட்டணம் கொடுத்து கேபிள் டிவியை நாட வேண்டிய கட்டாய நிலையும் ஏற்படாது.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு, அரசு தொலைக் காட்சியான தூர்தர்‌ஷன் மூலம் சாமானிய மக்களும் தொடர்ந்து செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் கண்டு பயன்பெறுவதற்கு ஏதுவாக சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.