செய்திகள்

கதிராமங்கலம் பொதுமக்கள் மீது முதல்வரே குற்றம் சுமத்துவது நியாயமல்ல: ஜி.கே.வாசன்

கதிராமங்கலம் பொது மக்கள் மீது தமிழக முதல்வரே குற்றம் சுமத்துவது, கொஞ்சம்கூட நியாயமல்ல என மதுரையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மாலை மலர்

மதுரை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல அமைப்புக்கான ஆய்வு குழு கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி தெரிவிப்போம்.

எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. ஓட்டு போடுவதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. தவறு செய்யாதவர்களுக்குத்தான் வாக்கு என்றால் யாருக்கும் ஓட்டு போட முடியாது.

விவசாயிகளின் உடமைகளை ஜப்தி செய்யக்கூடாது என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் வறட்சி இல்லை என்ற அரசு வக்கீலின் வாதம் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது.

இலங்கை பாராளுமன்றத்தில் எல்லைதாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் நிறைவேற்றி இருப்பதன் மூலம் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.

மத்திய -மாநில அரசுகள் இதற்கு அடிபணிய கூடாது. அதை அடக்க வேண்டும்.

புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் கிரண்பேடியின் தனிப்பட்ட செயல்பாடுகள், அங்கு வாழும் மக்களை வெகுவாக பாதிக்கும்.

கதிராமங்கலம் பொது மக்கள் மீது தமிழக முதல்வரே குற்றம் சுமத்துவது, கொஞ்சம்கூட நியாயமல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.