ஜி.கே.வாசன் 
செய்திகள்

மேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

தஞ்சை,வேலூரை பிரித்து மேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

குமரி மேற்கு மாவட்டம் கருங்கலில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களுக்கு பொது மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீர் வளத்தை காக்க துணை நிற்க வேண்டும்.

நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு எனவும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

இதுபோல தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டமும், வேலூரை பிரித்து புதிய மாவட்டமும் உருவாக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளித்தது. எனவே இப்போது நடக்கும் வேலூர் தேர்தலில் அங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கே த.மா.கா. ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான குமாரதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். அவரது இறுதி சடங்கில் ஜி.கே.வாசனால் கலந்து கொள்ள இயலவில்லை.