சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு சிறப்பு கூடுதல் கலால் வரி விதித்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதை கவனத்தில் கொண்டு வரியை தவிர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் புதியதாக, சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயை அறிவித்திருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இந்த விலை உயர்வால் போக்குவரத்துக்கான செலவும் கூடும், பொருட்களின் விலையும் உயரும்.
அது மட்டுமல்ல அன்றாட போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வானது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் அது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும், சரக்கு கட்டணம் உயர்ந்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி விதிப்பை நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.