செய்திகள்

ஆர்.கே.நகரில் த.மா.கா. போட்டி இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மாலை மலர்

ஜெயலலிதா மறைந்ததால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார். இவர்கள் தவிர டிடிவி தினகரன், தீபா போட்டியிடுவதாக கூறியுள்ளனர். பா.ஜ.க.வும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளன.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் ஒதுங்கி நிற்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, த.மா.கா. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.