கூர்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைத்து கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கூர்காலாந்து கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஏற்காத நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறையும் வெடித்துள்ளது. போராட்டத்தை முறியடிப்பதற்காக துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அமர் சிங் ராய்(டார்ஜிலிங்), சரிதா ராய் (கலிம்போங்) மற்றும் ரோகித் சர்மா (குர்சியாங்) ஆகியோர் இன்று கவர்னர் கே.என்.திரிபாதியை சந்தித்தனர். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் எடுத்துரைத்தனர்.
மேலும், டார்ஜிலிங் மலைப்பகுதியில் நடைபெறும் அரசியல் போராட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.
டார்ஜிலிங் நகரம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளில் ஈடுபடுவோர், கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.