தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கொண்டகர அள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். கொத்தனார். இவரது மனைவி இளையராணி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் குமரேசன் வெளியூரில் தங்கி இருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியிடம் சண்டை போடுவார் என தெரிகிறது.
வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிற குமரேசன் வாரந்தோறும் சனிக்கிழமை வேலை முடிந்ததும் ஊருக்கு வந்து விடுவார். அதுபோல் நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் ஊருக்கு வந்த அவர் நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தார். பின்னர் போதையில் தள்ளாடியபடி இரவு வீட்டுக்கு வந்தார்.
இதை பார்த்த அவரது மனைவி இளையராணி தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இளையராணி இனிமேல் உன்னுடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அவர் வலியால் கதறி அழுதார்.
ஆனால் பக்கத்தில் இருந்த கணவர் குமரேசன் அவரை காப்பாற்ற முயற்சிக்க வில்லை என கூறப்படுகிறது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து இளையராணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் இன்று காலை 5.40 மணி அளவில் இளையராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த பிறகும் குமரேசன் இதுவரை மருத்துவமனைக்கு வந்து மனைவியை பார்க்கவில்லை என மருத்துவமனையில் இருந்த போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அவருடைய கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.