கைது 
செய்திகள்

நெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

நெல்லையில் மகள் உறவுமுறை உள்ள 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லையை சேர்ந்த 42 வயது தொழிலாளி ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 6 வயது பெண் குழந்தையுடன் இருந்த ஒரு விதவை பெண்ணை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

2-வது மனைவியின் குழந்தையை தன் குழந்தையாக நினைத்து படிக்க வைத்தார். சந்திப்பு பகுதியில் படித்து வந்த அந்த சிறுமி 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க மறுத்து வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது அந்த சிறுமிக்கு 15 வயது ஆகிவிட்டது.

சிறுமியின் தாயார் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருவார். ஆனால் தந்தை முறையான தூய்மை பணியாளர் வேலையை முடித்துவிட்டு பகல் 12 மணி அளவிலேயே வீட்டுக்கு வந்து விடுவாராம்.

அப்போது வீட்டில் தனியாக இருக்கும் மகள் உறவு முறையுள்ள அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமியின் வயிறு பெரிதாகிக் கொண்டே வருவதை கவனித்த தாயார், அதிர்ச்சி அடைந்து விசாரித்தபோது தனது 2-வது கணவரே மகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நெல்லை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தூய்மை பணியாளர் மீது வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.