செஞ்சி:
செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள்கள் வனிதா(வயது 12), வினிதா(12), அபிநயா(14). இதில் வனிதாவும், வினிதாவும் இரட்டை சகோதரிகள் ஆவர். இவர்கள் 3 பேரும் தங்களது நிலத்தில் உள்ள மாட்டுக்கு தண்ணீர் வைத்துவிட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குட்டையில் குளித்தனர். குட்டையில் ஆழம் அதிகமாக இருந்ததால் 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.
வினிதா மட்டும் கரையை பிடித்தபடி குட்டையை விட்டு வெளியேறி சத்தமிட்டாள். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, குட்டையில் இறங்கி 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அபிநயா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமாக உள்ள அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.