நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் ஹார்பர் ரோட்டை சேர்ந்தவர் இருதய தாசன் (வயது 58), மீனவர். கடந்த 2-1-2016 அன்று கீழ மணக்குடியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு இருதயதாசன் சென்றார்.
அப்போது 7½ வயதுடைய உறவுக்கார சிறுமி ஒருவரை ஆலய விழாவுக்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமியை அப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவத்தை சிறுமி, பெற்றோரிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இருதயதாசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் நேற்று தீர்ப்பு கூறினார். இருதய தாசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் மீனாட்சி ஆஜரானார்.