செய்திகள்

கிர் வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 21 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Girforest

அகமதாபாத் :

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த வனப்பகுதியில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் மேலும் 3 சிங்கள் உயிரிழந்தன.

இந்நிலையில், கிர் வனப்பகுதியின் தல்கானியா பகுதியில் நோய்வாய்பட்ட நிலையில் இருந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு வனத்துறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், அந்த 7 சிங்கங்களும் நேற்று திடீரென உயிரிழந்தது. இதனால் பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த சிங்கங்களை பரிசோதனை செய்ததில் வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இது என்ன வகையான வைரஸ்? எப்படி திடீரென சிங்கங்களை தாக்கியது ? என்பது பற்றி தெரியவில்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என தலைமை மருத்துவர் டி.டி.வசவாடா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோய் வாய்ப்பட்ட சிங்கங்களை மீட்க்கும் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 600 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Girforest

SCROLL FOR NEXT