ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் ஆஸ்திரேலியா - ஜெர்மனி அணிகள் மோதின.
இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணியினரும் விளையாடினர். ஆட்டம் தொடங்கியதில் இருந்து 40-வது நிமிடம் வரை இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. அதன்பின் இறுதி நேர ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
முதலாவதாக 42-வது நிமிடம் ஆஸ்திரேலியாவின் டைலன் வொதர்ஸ்பூன் கோல் அடித்தார். தொடர்ந்து 48-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஹைவார்ட் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். அதன்பின் கடைசி நிமிட ஆட்டத்தில் டாம் விக்கம் ஆஸ்திரேலிய அணிக்காக மூன்றாவது கோல் அடித்தார்.
முன்னதாக மாலை 5:15 மணிக்கு நடந்த 5-வது மற்றும் 6-வது இடங்களுக்கான போட்டியில் பெல்ஜியம் - ஸ்பெயின் அணிகள் மோதின. இப்போட்டியின் 4-வது நிமிடம் பெல்ஜியம் அணியின் செபஸ்டின் டாகியர் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் அதுவே வெற்றி கோலாக அமைந்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம் 5-வது இடத்தை பிடித்தது.