கீதாஜீவன் எம்எல்ஏ 
செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் மின்வெட்டை சரிசெய்யாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம்- கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி மாநகரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்யாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இந்த மின் தடையால் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எட்டயபுரம் ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் டிரான்ஸ் பார்மர் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.