முள்ளக்காடு:
தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெறாததால் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதி சுற்று வட்டார மக்கள் 29 நலச்சங்கங்கள் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து ஸ்பிக்நகரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனை விளக்க உரையாற்றி முத்தையாபுரம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், முன்னாள் வி.ஏ.ஓ. சின்னதங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் நடேசன் டேனியல், மனோகர், ஜெயக்கனி விஜயகுமார் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பேச்சாளர் மஜீத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:- தூத்துக்குடி மாநகராட்சியாக அறிவித்து அதற்கான வளர்ச்சி திட்டங்களையும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் அனைத்தும் கிடப்பில் உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள், குடிநீர் பணிகளை உடனே நிறைவேற்ற பொதுப் பணித்துறையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் நான் நேரில் சென்று வலியுறுத்தி வருகிறேன்.
மாநகராட்சியில் 4-வது பைப் லைன் பணிகள் முடிய மேலும் 3 கோடி தேவைப்படுவதாக கூறுகின்றனர். அப்படியானால் திட்ட மதிப்பீடு என்ன ஆச்சு? விபரங்களை கேட்டால் பதில் இல்லை. பாபநாசம் அணையில் 51 அடி நீர் இருந்தும் மக்கள் குடிநீருக்காக போராடும் நிலை இருப்பது வேதனையாக உள்ளது. மக்கள் ஒன்று பட்டால் எதையும் வெற்றி கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.