செய்திகள்

இனி போர்க்களத்தில்தான் பேசவேண்டும்- புல்வாமா தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர் காம்பிர் கண்டனம்

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, இனி போர்க்களத்தில்தான் பேச வேண்டும் என கிரிக்கெட் வீரர் காம்பிர் ஆவேசமாக கூறியுள்ளார். #PulwamaAttack #GautamGambhir

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.