வாயுக்கசிவு ஏற்பட்டதால் வெளியேறிய தொழிலாளர்கள் 
செய்திகள்

விசாகப்பட்டினம் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் வாயுக்கசிவு

வாயுக்கசிவு ஏற்பட்டதை கவனித்த ஊழியர்கள், அலாரத்தை ஒலிக்கச் செய்ததால், அனைத்து ஊழியர்களும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

மாலை மலர்

விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது கச்சா எண்ணெய் வடிகட்டும் 2வது அலகில் லேசான வாயுக்கசிவு ஏற்பட்டது. இதை கவனித்த ஊழியர்கள், அலாரத்தை ஒலிக்கச் செய்தனர். பின்னர் அனைத்து ஊழியர்களும் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். வாயுக்கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டறிந்து, சிறிது நேரத்தில் கசிவை அடைத்தனர். அதன்பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். வாயுக்கசிவை உடனடியாக கண்டறிந்து சரி செய்ததால் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.