கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் சேதமான பொருட்கள். 
செய்திகள்

வீரகனூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து- பொருட்கள் எரிந்து சேதம்

வீரகனூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

மாலை மலர்

ஆத்தூர்:

சேலம் மாவட்டம்  வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 65). இவர் தனது வீட்டின் மாடியில் கூரை அமைத்து கணவருடன் வசித்து வருகின்றார். 

இன்று காலை தங்கம் தனது பேரக்குழந்தைகளுக்கு பால் காய்ச்சி கொடுப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்தார். அப்போது எதிர் பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி தீப்பற்றியது. உடனடியாக தங்கம் தண்ணீரை எடுத்து தீயின் மேல் ஊற்றினார்.

ஆனாலும் தீ மளமளவென பரவியது. இதனால் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்தார். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீடு முழுவதும் தீ மளமளவென பரவியது வீட்டிலிருந்த டி.வி, மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் புதிதாக வீடு கட்டு வதற்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் ரூ. 2 லட்சம், 5 பவுன் தங்க சங்கிலி, முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் என கூறப்படுகிறது. வீட்டில் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

தங்கம் காயங்களுடன் கெங்கவல்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.