கைது 
செய்திகள்

ராமாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது

ராமாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1கிலோ 130 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போரூர்:

ராமாபுரம், வளசரவாக்கம், மணப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பதாக தெற்கு இணை கமி‌ஷனர் மகேஸ்வரிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா பாரதிதாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ராமாபுரம் கிரி நகர் மாநகராட்சி பூங்கா அருகே சந்தேகப்படும் படி நின்ற வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் ராமாபுரம் நடேசன் நகரைச் சேர்ந்த சந்துரு (20) என்பதும் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

சந்துரு சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் இருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து வீட்டில் பதுக்கி சிறிய பொட்டலங்களாக உடன் படிக்கும் நண்பர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் அவரிடம் இருந்து 1கிலோ 130 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT