செய்திகள்

அசாம்: கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்

அசாம் மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

கவுகாத்தி:

அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தின் போகோ பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை, சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரது வீட்டின் அருகில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் சிறுமி இறந்துவிட்டதாக கருதி அங்கிருந்து சென்று விட்டனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து, கடந்த 14-ம் தேதி சிறுமியை ஆபத்தான நிலையில் கவுகாத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று பரிதாபமாக இறந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.