செய்திகள்

சேலம் அருகே கும்பலால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் மரணம்

குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கும்பல் தாக்கியதில் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டம் வீரானூர் அருகே உள்ள சின்னனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சசிகுமார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சசிகுமார் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். சசிகுமாரின் சகோதரி கணவர் சேகர் என்பவரும் ஆட்டோவில் இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பெரிய வீராணத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்டீபன்ராஜ் (28),குட்டி என்ற மோகன்குமார் (27), மணிவண்ணன், செல்வகணபதி (19) ஆகியோர் ஆட்டோவை வழி மறித்தனர். ஆட்டோ நின்றதும் ஆட்டோவில் 4 பேரும் ஏறினர்.

குடிபோதையில் இருப்பதால் ஆட்டோவில் உங்களை அழைத்து செல்ல மாட்டேன், நீங்கள் கீழே இறங்குங்கள் என்று சசிகுமார் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து கட்டையால் ஆட்டோவை அடித்து உடைத்தனர். மேலும் சசிகுமாரையும் சரமாரியாக தலை உள்பட பல பகுதிகளில் தாக்கினர்.

இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேரம் செல்ல செல்ல தலையில் ரத்தம் உறைந்ததால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மயக்க நிலையிலேயே அவர் இருந்தார். இதையடுத்து சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள், மனைவி, பிள்ளைகள் கதறி துடித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரித்த வீராணம் போலீசார் சசிகுமாரை தாக்கிய ஸ்டீபன்ராஜ், மோகன்குமார், மணி வண்ணன், செல்வகணபதி ஆகிய 4 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் ஸ்டீபன்ராஜ் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

சசிகுமார் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளதால் அங்கு அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதே போல சொந்த ஊரிலும் பதட்டம் நிலவுவதால் அசம்பா விதங்கள் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்து போன சசிகுமாருக்கு கல்பனா என்ற மனைவியும், கீர்த்தி வாசன்(17), சூர்யா (14) என்ற 2 மகன்களும்,கீர்த்தனா(16) என்ற மகளும் உள்ளனர். இதில் கீர்த்திவாசன் 12-ம் வகுப்பும், கீர்த்தனா 10-ம் வகுப்பும், சூரியா 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் அப்பாவி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.